Friday, July 21, 2017

உனக்கும் வருமடி "வளர்மதி "ஆப்பு...

அண்ணே!
ஒரு சின்ன டவுட் அண்ணே
சமூகத்தைக் கெடுப்பது என்றால்
சமூக  அமைதியைக் கெடுப்பது
என்றால் என்ன அண்ணே ?

தம்பி
சமூகத்துக்கு எது எது
தேவையற்றதோ
எதை எதைச் செய்தால்
அது
இன்னும் நாசமாகுமோ
அதையெல்லாம் செய்வது
சமூகத்தைக் கெடுப்பது

என்ன செய்தாலும்
பொறுத்துக் கொண்டு
ஸ்மரணையற்றுக் கிடக்கும்
சமூகத்தைத் தட்டியெழுப்ப முயன்றால்
அது சமூக அமைதியைக் கெடுப்பது

சமூகத்தைக் கெடுக்க
உறுதுணையாய் இருந்தால்
சம்பள உயர்வு இரண்டு பங்கு
நிச்சயம் உண்டு

மாறாக
அதற்கு எதிராக
ஏதேனும் பிரச்சனை செய்தால்
தண்டனை என்பது
நிச்சயம் உண்டு

அண்ணே
அப்ப இந்த ஜன நாயகம்
மக்கள் உரிமை
அப்படி இப்படிச் சொல்றதெல்லாம்
என்ன அண்ணே

போடா மண்டு
எந்த ஊரில் இருந்துகிட்டு
என்ன என்னவோ எல்லாம்
உளறிக்கிட்டு

உன் வீட்டுக்கிட்டயே
கடையைத் திறந்தாச்சு
போய் ஒரு ஆஃப் அடிச்சிட்டு
பேசாமத் தூங்கு

இல்லாட்டி
உனக்கும் வருமடி
"வளர்மதி "ஆப்பு

Thursday, July 20, 2017

கமல் சார்....

கமல் சார்
இப்பத்தான் தெரிஞ்சது
நீங்க ஒரு பெண்ணை
அவ விருப்பத்துக்கு மாறா
கடத்திட்டுப் போய்
கொடைக்கானலிலே
மறைச்சு வச்சது

அதுக்கு ஆதாரம் தேடி
இப்பத்தான்
அந்தக் குகைக்கு
விசாரணைக் குழு போயிருக்கு

(இதில் தப்புவது கஸ்டம்
ஏன்னா அந்தக் குகைக்குப் பேரே
இப்ப குணா குகைதான் எப்புடீ )

அப்புறம் நீங்க
பரமக்குடி பார்ப்பானாமே
அது கூட
இப்பத்தான் தெரிஞ்சது

(இதிலும் தப்புவது மிக மிக கஸ்டம்
நீங்க படிச்ச ஸ்கூலில் இருந்து
ஆதாரத்தைத் திரட்டிட்டோம் )

ஏன்னா
திராவிடம் ஆரிய மாயையில
சிக்கிடப் பூடாது இல்ல

இன்னும்
நிறைய ஆதாரம் இருக்கு
அவசியமானா அப்ப  அப்ப
வெளியிடுவோம்

தெளிவாய்ச் சொல்லிடறோம்
நாங்க சினிமா எடுக்க
உங்கப் பக்கம் வரலை

நாங்க என்னவோ அரசியல்ல
படம் காட்டித் திரிவோம்
அதுக்கு நீங்க வராதீங்க

அதுதான் இருவருக்கும் நல்லது
புரியுதா ?
 

Tuesday, July 18, 2017

தமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...

பணம் பத்தும் செய்யும்
இது பழைய மொழி
பதினொன்று செய்வது
"அன்பே வா "காலம்
எதையும் செய்யும் என்பது
"சசியின்" காலம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
-----------
பணத்தைக் கொண்டு
எதையும் செய்யலாம் எனச்
சமூகச் சூழல் ஆன பின்பு

எதையும் செய்து
பணம் சம்பாதிக்கலாம் என்பது
இன்றைய தர்மம்
இப்படிப் பேசிச் சமாதானம் கொள்வோம்
--------------

பணம் பாதாளம் வரை
பாயும் எனில்
பக்கம் இருக்கிற
மாநிலச்சிறைக்குள்
பாய்வதில் என்ன ஆச்சரியம் ?
இப்படிக் கேட்டு எதிரியை மடக்குவோம்
---------------

விலையில்லா பொருட்கள் கொடுத்து
நம் வாயடைத்து
அரசுப்பணிகள்
அனைத்திற்கும்
விலை வைத்தது ராஜ தந்திரம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
----------------

தர்மம் நியாயம்
நீதி சட்டம் அனைத்தையும்
சந்தைப்படுத்தியது
அரசியல் சாகசம்
இப்படிச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்
--------------------
மறக்காது
சாக்கடை அரசியலும்
அதனைச் சகிக்கும் மனப்பாங்கும்
தமிழனுக்கே உரியது என
உலக அங்கீகாரம் பெறுவோம்
மீசையை முறுக்கிக்  கர்வமும் கொள்வோம்

Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது

  

Saturday, July 15, 2017

பொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா

நகரமயமானபின்னே
சேரிக்கான பொருளே
வேறுவகையாகிப்போனதே

வேளச்சேரி,கூடிவான்சேரியை
மட்டும் சொல்லவில்லை
கூவத்தோரம் இருப்பவர்களுக்கும்
சேர்த்துத்தான் சொல்கிறேன்

கிராமங்களில்
பழையபச்சேரிகள்
எனச் சொல்லப்பட்டதெல்லாம்
அம்பேத்கார் நகர் எனவே
பொதுப்பெயர் பெற்றுப் போக

சேரிகள் எனில்
பொருளாதார ரீதியாக
பின் தங்கியோர்
வாழும் பகுதி என ஆனபின்
ஜாதிப்பிரச்சனை ஏன் வருகிறது ?

அவர்களை முன்னேறாது
அவர்களாகவே வைத்திருத்தலே
தங்கள் நிலைப்புக்கு வசதி
எனக் கருதும் அரசியல் வியாதிகள்

அவர்களே மறந்துபோன
அவர்களுக்கான அடையாளங்களை
மீண்டும் நிலை நிறுத்த
முயல்வதுதான்
பொலிடீசியன் பிகேவியரா ?

இல்லை இது கூட
பிக் பாஸுக்கு மறைமுகமாய்
ப்ரொமோஷன் செய்யும் தந்திரமா ?

Friday, July 14, 2017

மாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்

மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் சில  மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை
புரிந்து கொண்டால் குழப்பமில்லை

உதாரணமாய்...

நில உடமைச் சமுதாயத்தின்
எச்சமாய் இருந்த
எங்கள் ஊர்
நான் சிறுவனாய் இருக்கையில்...

கீழக்கடைசியில் பச்சேரி
மேலக்கடைசியில் அக்ரஹாரம்
இரண்டுக்குமிடையில்
பிள்ளைமார தெரு
யாதவர் தெரு
நாடார் தெரு
தெற்குப் பகுதியனைத்தும்
சேர்வார் வீதி
அதை ஒட்டி
சௌராஸ்டிரா தெருவென
ஜாதியாகத்தான் பிரிந்திருந்தது

அறுபத்தியேழுக்குப் பின்
எழுந்த ஒரு பெரும்
சமூக நீதிப்புரட்சியில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தில்
சாதிப்பெயர்கள் அனைத்தும்
அழித்தொழிக்கப்பட்டு

கீழக்கடைசியில் அம்பேத்கர் நகர்
மேலக்கடைசி ஈஸ்வரன் கோவில்தெரு
இரண்டுக்குமிடையில்
வ.வு.சி வீதி,மற்றும்
கோபாலகிருஷ்ணன் தெரு
காமராஜர் தெரு
தெற்குப்பகுதியனைத்தும்
மருதுபாண்டியர் தெரு
அதை ஒட்டி பிரஸ்ன்ன காலனி
என அரசின் உத்திரவால்
சமத்துபுரமாகிப் போனது

மனம் மாற்றி பெயர் மாற்றாததால்  
சில நாட்கள் பெயர்க்குழப்பமிருந்தது

விளக்கம் சொல்பவர்கள்
"அதுதாம்பா "எனச் சொல்லிப்
பழைய பெயரைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இப்போதெல்லாம்
பெயரிலேயே விளக்கம் இருப்பதால்
யாரும் குழம்புவதில்லை

ஆம்மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை

புரிந்து கொண்டால் குழப்பமில்லை


Thursday, July 13, 2017

அரண்மனை மெத்தைக் கூட....

பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அரண்மனை மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம்