Tuesday, November 25, 2014

விளக்கம் கோரி ஒரு கேள்விக் கவிதை

நதியினுக்கு கரையிரண்டு உறவா பகையா ?
நாவினுக்கு பல்வரிசை உறவா பகையா ?
விழியினுக்கு இமையிரண்டு உறவா பகையா
விதியதற்கு மதியதுவே உறவா பகையா ?
மொழியினுக்கு சைகையது உறவா பகையா ?
கவியதற்கு இலக்கணமே உறவா பகையா ?
புரியாது புலம்புகிறேன் சொல்வாய் நண்பா

மனதிற்கு மறதியது அழகா குறையா ?
மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?
இனமதற்கு  தனித்தகுணம் அழகா குறையா ?
இயற்கைக்கு ஈகைக்குணம் அழகா குறையா ?
இளமைக்கு வேகமது அழகா குறையா ?
முதுமைக்கு நிதானமது அழகா குறையா ?
புலமைக்கு மிகைப்படுத்தல் அழகா குறையா ?
புரியாது தவிக்கின்றேன் புகல்வாய் நண்பா

அன்புக்கு அடிபணிதல் சரியா தவறா ?
அதிகாரம் தனைமறுத்தல் சரியா தவறா ?
பண்புக்கு துணைபோதல் சரியா தவறா ?
பகட்டுக்கு பகையாதல் சரியா தவறா ?
இன்பத்தில் மயங்காமை சரியா தவறா ?
துன்பத்தில் கலங்காமை சரியா தவறா ?
சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
நல்லதொரு விளக்கமதை நவில்வாய் நண்பா?

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

5050

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...
5050

//புரியவில்லை
விளக்கம் சொன்னால் மகிழ்வேன்

ஒருவேளை
50/50 இப்படியோ

இராஜராஜேஸ்வரி said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா.. இது அழகான சந்தேகம்தான்.
கொடியசைந்ததும் காற்றுவந்ததா? பாடல் கேட்டிருக்கிறீர்கள் தானே? அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிக்கலான கேள்விகள்.. ஆனால் அழகான சிக்கல்.
கவிதை அழகில் சிக்கிக்கொண்டால்-
மீள விரும்புவதா? திரும்புவதா? த.ம.3

G.M Balasubramaniam said...

தெரிந்தால் சரியென்றும் தெரியாவிட்டால் எதிர்மறையாகவும் கொள்ளலாமா. பல நேரங்களில் தனபாலன் கூறுவது போல் ஃபிஃப்டி ஃபிஃப்டி தான் என்று தோன்றுகிறது.

கோமதி அரசு said...

அருமையான கவிதை.

ADHI VENKAT said...

இரண்டும் தான்.....

த.ம +1

Anonymous said...

சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
இப்பொது தான் ஒரு பிரபலத்தின் புலம்பல் கவிதை வாசித்தேன்..
ஆகா ஓகோ என்று பலர் கருத்திட்டுள்ளனர்.
எனக்கும் பெரும் சந்தேகம். நாம் எழுதுவது என்ன?
அதுவும் சிரமப்பட்டு எழுதுவது என்ன?
கருத்தகள் ஏன் விழுவதில்லை எமக்கு?
வேதா. இலங்காதிலகம்.

”தளிர் சுரேஷ்” said...

பதில் சொல்ல முடியாத கேள்விகள்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்

Unknown said...

#மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?#
இரக்க குணம் எல்லோருக்கும் அழகுதானே ?
த ம 5

Seeni said...

அருமையான கவிதை.

KILLERGEE Devakottai said...

கேள்விக்கவி அருமையா ? அழகா ?
புரியாத புதிராய் நானானேன் கவிஞரே,,,

ஊமைக்கனவுகள் said...


நதிகரையை பகையென்றால் வெள்ளம்! சொல்லும்
நா“பல்லைப் பகையென்றால் மழலை! காணும்
விழியிமைக்குப் பகையானால் கனவும் ஏது?
விதிபகைக்கும் அறிவன்றோ வெற்றி வாகை?
மதிபடைத்த சைகைபகை மொழியாம்! சொல்லில்
மயக்கத்தைப் பகைத்திலக் கணமே நிற்கும்!
முதிரறிவு கொண்டவெம் இரமணி அய்யா!
மூடனிவன் சொல்தவறோ? மன்னிப் பீரே!
அய்யா தொடரலாமா ?

ஊமைக்கனவுகள் said...

த ம 6

Yaathoramani.blogspot.com said...

ஊமைக்கனவுகள். said...//

மூலத்தைவிட
அதற்கான பதிலுரை , விளக்க உரை ,பின்னுரை
மிகச் சிறப்பாக அமைந்து விடுவதுண்டா என்ற
கேள்விக்கு மிகச் சரியான விடை உண்டு என்பதுதான்

அதற்குத் தங்கள் கவிதையே சான்று
தங்கள் மேலான வரவுக்கும் அற்புதமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

RajalakshmiParamasivam said...

நீங்கள் சொல்லியுள்ள பலவற்றை நானும் சரியா தவறா என்று என்னையே கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன். பதில் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இளமதி said...

வணக்கம் ஐயா!

சிந்தனை உங்களைச் சிறைப்பிடித்ததா?
நீங்கள் சிந்தனையை சிறைப்பிடித்தீர்களா?..

அற்புதமாகச் சிந்தித்துள்ளீர்கள் ஐயா!..

அனைத்தும் இயல்புதான் ஐயா!
பிறப்பும் இறப்பும் எப்படி இயல்போ அப்படியே காண்கின்ற, நிகழ்கின்ற அத்தனையும்..!

வாழ்த்துக்கள் ஐயா!

கரந்தை ஜெயக்குமார் said...

கேள்விகளால் ஒரு கவிதை
அருமை ஐயா
தம +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை... மிக அருமையாக உள்ளது
பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா கேள்விகளும் நியாயமானவையே! எல்லாமே சரியான விகிதத்தில் இருந்துவிட்டால் நன்மையே சீராக இருக்கும்....இல்லையேல்..அதனால் டிடி அவர்கல் சொல்வது போல் 50/50

Unknown said...

கேள்விகள் நன்று!

Post a Comment