Friday, June 19, 2015

மீண்டும் ஞானப்பழம்

இருவேறு துருவங்கள்
ஒரு மையப்புள்ளியில்
நேராக சந்தித்ததுபோல்
பல வருடங்களுக்குப்பின்
நானும் அவனும் சந்தித்திருந்தோம்

முக்கிய மூன்று தேவைகளின்
அசுர நெருக்கடியில்
அல்லும் பகலும் அவதியுறும் நான்...
பள்ளி நாட்களில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
கல்லூரிப் படிப்பினில்
தங்கப்பதக்கம்வென்றவன்

அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்

அவனின் அதீத வளர்ச்சி
மகிழ்வினைத் தந்தாலும்
மிக அதிசயமாகவும் இருந்ததால்.
அது குறித்து விவரம் தெரிந்தால்
அனைவருக்கும் ஆகுமே என
அவனிடம் அதுபற்றிக் கேட்டு வைத்தேன

"எல்லாம் நாரதர்கனி தந்த பாடம்" என்றான்
விளங்காது நான் விழித்து நிற்க
அவனே விளக்கமும் சொன்னான்.

"நீங்களெல்ல்லாம்
கனிக்கான போட்டியில்
வேலிருக்கும் மயிலுருக்கும்
உள்ளார்ந்த தெம்பினில்
உலகம் சுற்றப்போகும் முருகன்கள்

நாங்களெல்லாம்
உலகமே அம்மையப்பன்
அம்மையப்பனே உலகமென்று
அவர்களைச் சுற்றியே
கனியினைப்பெறும் வல்லவர்கள்" என்றான்

"என் கேள்விக்கும்
இந்த பதிலுக்கும்
என்ன சம்பந்தம் " என்றேன்

"தத்துவங்களை ரொம்ப விளக்கக்கூடாது
விளக்கினால் நீர்த்துப் போகும்"எனச் சொல்லி
சிரித்தபடி என்னைக் கடந்து போனான்.

 எனக்கு எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது

25 comments:

bandhu said...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோமோ?

ஸ்ரீராம். said...

அனுபவம் போலவே நல்லதொரு கருத்தினைச் சொன்னீர்கள். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

:)))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவர் தெளிவாகச் சொல்லாமல் சொல்லிச் சென்றதும், தாங்கள் புரியாதது போலச் சொல்லி அதனை இங்கு புரிய வைத்துள்ளதும் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... தத்துவங்களை அனுபவிக்க வேண்டும்...

பிள்ளையாரப்பா...!

KILLERGEE Devakottai said...

தத்துவங்களை ஆராயக் கூடாதுதான்
தமிழ் மணம் 4

Yaathoramani.blogspot.com said...


KILLERGEE Devakottai said..//.
தத்துவங்களை ஆராயக் கூடாதுதான்//

இல்லை இது ஆராயவேண்டிய தத்துவம்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//
சரி தான்... தத்துவங்களை அனுபவிக்க வேண்டும்.//

அனுபவித்தலை விட ஆராய்தல்
கூடுதல் பலன் தரும்
.

Yaathoramani.blogspot.com said...

bandhu said...//
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோமோ?//

மிகச் சரி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
அவர் தெளிவாகச் சொல்லாமல் சொல்லிச் சென்றதும், தாங்கள் புரியாதது போலச் சொல்லி அதனை இங்கு புரிய வைத்துள்ளதும் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன//


கவிதையின் நாடிபிடித்து மிகச் சரியாகச்
சொன்னது மகிழ்வளிக்கிறது

சசிகலா said...

புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்தனை இன்றும் வியக்குபடியாகத் தந்தது சிறப்புங்க ஐயா.

Yaathoramani.blogspot.com said...

சசி கலா said...//
புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்தனை//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

balaamagi said...

எனக்கு எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது
இது தான் உண்மை, இதைத் தான் அவர் ஆராயக் கூடாது என்கிறார் பொலும். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

mageswari balachandran said...//

தெருவில் நிற்பது போலவும் பட்டது
இது தான் உண்மை, இதைத் தான் அவர் ஆராயக் கூடாது என்கிறார்//

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

வெட்டிப்பேச்சு said...

உங்களுக்கு எட்டாக் கனியாகி அவருக்கு எட்டிய கனி 'எட்டிக் கனி"
'யா இல்லையா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். பத்திரிக்கைச் செய்தியை பார்க்கவில்லையா வேலூரில் காவல் துறையின் பெரிய பொறுப்பை பெற்றவர் இப்போது தலைமறைவாகி பிடிபட்டு படும் பாட்டை பார்க்கவில்லையா?
வட இந்தியாவில் ஒரு IAS அதிகாரி தன் கைத் துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்படவில்லையா..?

தனக்கு கிடைத்த கனி எது என்றும் கிடைக்காதது எது என்றும் சரியாக அறிவதே ஞானம். அதற்கு கையிலிருக்கும் கனியை உணர்ந்து சுவைத்தாலே அதுதான் ஞானப்பழம் எனப் புரிபடும்.

எல்லொர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியை நல்ல முறையில் வெளிக்கொணர்ந்துள்ளீர்.

God Bless You

Yaathoramani.blogspot.com said...

வெட்டிப்பேச்சு said...//

தனக்கு கிடைத்த கனி எது என்றும் கிடைக்காதது எது என்றும் சரியாக அறிவதே ஞானம். அதற்கு கையிலிருக்கும் கனியை உணர்ந்து சுவைத்தாலே அதுதான் ஞானப்பழம் எனப் புரிபடும்.

எல்லொர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியை நல்ல முறையில் வெளிக்கொணர்ந்துள்ளீர்.//


அருமையான தெளிவான விளக்கம்
தங்கள் வரவுக்கும் அற்புதமான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

kowsy said...

எமக்கு அருகில் எமது வெற்றி இருக்கும். ஆனால் நாமோ எம்மை வருத்தி வெற்றிக்காய் ஓடிக் கொண்டிருப்போம். நாம் ஓடிப் பெறும் வெற்றியைச் சிலர் இருத்த இடத்திலிருந்தே பெறுவர். இந்த சூட்சுமத்தை அறியும் ஞானப்பழம் கிடைப்பவனே பாக்கியசாலி.

Yaathoramani.blogspot.com said...

Chandragowry Sivapalan //

மிகச் சரி
அருகில் மிகச் சரியாக எதில்,எதனால், ஏன்
எனத் தெளிந்து அதில் மட்டுமே
கவனம் கொள்பவன் எவனோ அவனே
பிழைக்கத் தெரிந்தவனாக இருக்கிறான்
தங்கள் வரவுக்கும் அருமையான
கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

தங்கள் பாவிலே
ஒரு சந்திப்பு
ஒரு நாரதர்
ஒரு ஞானப் பழம்
எத்தனையோ எண்ணங்களை
நம் உள்ளத்தில் விதைக்கிறதே!

Anonymous said...

ஞானபழத்தால் நண்பருக்கு சிரமங்கள் ஏற்படாது இருக்க வேண்டும். படித்தவர் பதவியில் உள்ளவர் சுக வாழ்வு பெற பல படிக்காதவர், உடல் உழைப்பை தருபவர் ஏங்கி உள்ளனர். படித்து சுக வாழ்வு பெறுபவர் மற்றவரை நினைப்பதில்லை. எதோ படித்து பரிசு வாங்கி வேலையில் சேர்ந்து விட்டால் சமுகம் அவர்களுக்கு எல்லாம் இர வேண்டும் என்று நினைகின்றனர். அவர்கள் பிறப்புரிமை என்று உள்ளனர். ஆக ஏழைகளுக்கும் ,படிப்பு குறை உள்ளவர்க்கும் அம்மை அப்பன் துணை. ஞான பழம் கிடைக்கா விட்டாலும் எடுத்து கொள்ளும் காலம்.
எது ஞானபழம் என்பதை படித்தவனே தீர்மானிக்கிறான், பின் அதை இழந்து தவிக்கிறான்.

Yaathoramani.blogspot.com said...

ஏழைகளுக்கும் ,படிப்பு குறை உள்ளவர்க்கும் அம்மை அப்பன் துணை. ஞான பழம் கிடைக்கா விட்டாலும் எடுத்து கொள்ளும் காலம்.
எது ஞானபழம் என்பதை படித்தவனே தீர்மானிக்கிறான், பின் அதை இழந்து தவிக்கிறான்.//

அருமையான விளக்கம்
தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கலாமே

Yaathoramani.blogspot.com said...

Yarlpavanan Kasirajalingam said..//

.ஒரு ஞானப் பழம்
எத்தனையோ எண்ணங்களை
நம் உள்ளத்தில் விதைக்கிறதே!//

தங்கள் வரவுக்கும் அருமையான
கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Kasthuri Rengan said...

கல்வி வேறு
காசு பண்ணுதல் வேறு..
காசு பண்ணுதல் வேறு
அதைப் பெருக்குதல் வேறு..
அருமை அய்யா நல்லதோர் பதிவு
தம +

Yaathoramani.blogspot.com said...

Mathu S //

காசு பண்ணுதல் வேறு
அதைப் பெருக்குதல் வேறு..
அருமை அய்யா நல்லதோர் பதிவு //


தம தங்கள் வரவுக்கும் அருமையான
கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தத்துவம்! சிறப்பாய் சொன்னது அருமை!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
எளிதில் சொல்லி விளக்கவைத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment